8:38 AM

இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்

தை மாதம் அதிகாலை நேரம் தூக்கம் கண்களை திறக்கவிடமால் செய்யும் குளிர்கால தூக்கம் அதன் சுகம் எப்படி இருக்கும் வார்த்தைகளில் சொல்லுவதை விட அனுபவி  பர்களுக்கே தெரியும். அப்படி ஒரு  அருமையான காலைபொழுதில் இருசக்கர வாகனத்தில் பயணம் ஆனோம் இடையார்பாகம் மகாதேவர்கோவிலுக்கு.   சென்னை இருந்து சுமார் 70கிலோமீட்டர் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில் முதலாம் குலோத்துங்னால் கட்டப்பட்டது.சோழர்களின் திறைமைக்கு நாம் வார்த்தைகளில் வருணிப்பதை விட இதுபோன்ற இடங்களுக்கு சென்று ரசிப்பது தான் சிறந்தது.


இக்கோயிலில் எழுந்தருளி அருள் புரியும் இறைவன் "திருப்படக்காடுடைய மகாதேவர்" என்றும் "ஆளுடையார் திருப்படக்காடுடையார்" எனவும் அழைக்கப்படுவதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.


சுமார் ஆயிரம் வருடம் கடக்கவிருக்கும் இந்த கற்கோவில் கஜபிருசம் வடிவத்தில் அதாவது தூங்கானை மாட வடிவத்தில் கட்டப்பட்ட கோவில் தமிழர்களாகிய நம் முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற அடையாளங்களில் இதும் ஒன்று. கோவில் ஊரைவிட்டு சற்று தூரத்தில் இருப்பதால் அடையாளம் காண்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. மேம்படுத்தபடாதா  சாலைகள், மணற்குவியல்களும்,  பள்ளமும் தான் அதிகம். சிறிது தூரம் பயணம் ஆனதும் இடதுபுறமாக தமிழ்நாடு தொல்லியல் துறையில் சார்பில் போடப்பட்ட கான்கிரெட் சாலை நம்மை கோவிலின் இருப்பிடத்தை கொண்டு சேர்க்கும் வகையில் அமைதிருகின்றனர்.  


ஒரு அழகான ஏரிக்கரையின் மீது கட்டப்பட்ட கோவில். கோவிலை சென்றடைந்ததும் அரசமர காற்றும் அதிகாலை பொழுதும் நம் மனதை இளக செய்கின்ற  அளவிற்கு இருந்தது .கிழக்கு திசை நோக்கி நிற்கும் இக்கற்றளி தூங்கானை மாட (கஜபிருஷ்ட) வடிவில் அமைந்த இருதள விமானத்தைக் கொண்டுள்ளது. முழுவதுமாக சிதைந்து மரங்கள் முளைத்து எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாம இருந்த கோவிலை தமிழ்நாடு தொல்லியல்  துறை மீட்டெடுத்து புதுப்பித்து உள்ளனர். விமானம் முழுவதும் கற்களை கொண்டு இந்த கோவிலை வடித்துள்ளனர். அர்தமண்டமும் கருவரைமண்டமும் மட்டுமே தற்போது இருக்கிறது. கோவில்  கருவறை மண்டபத்தை சுற்றிலும் கோஷ்ட தெய்வங்கள் சோழர்கள் காலத்து வேலைபாடுகள்.. அர்த்தமண்டபத்தில் வடக்கிலும் துர்க்கையும் தெற்கே பிள்ளையாரும் இருத்தப்பட்டுள்ளர்.விமானத்தின் தென்புறத் தேவக்கோட்டத்தில் தட்ஷிணாமூர்த்தியும், வடபுறக் கோட்டத்தில் பிரம்மனும் காணப்படுகின்றனர். மேற்குக் கோட்டம் லிங்கோத்பவர் தற்போது காணவில்லை.


கோவில் அருகில் சென்றதும் முதலில் நான் ரசிப்பது பூதகணமே .ஒவ்வெரு  பூதகணமும் செய்கின்ற சேஷ்டைகளை  நாள் முழுவதும் ரசித்து கொண்டு இருக்கலாம். நந்தி தேவர் முகம் உடைபட்டு சிமெண்டு கொண்டு முகத்தை சரிசெய்து வைத்திருகின்றனர். வரவேற்க துவாரபாலகர் இல்லை. எல்லாம் திருடுபோய்விட்டதா  இல்லை சிதைந்து போய்விட்டதா என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.


அன்றைய நாட்களில் எந்நேரமும் கோவிலில் ஏற்றப்பட்ட விளக்கு அணைந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக  இருந்ததை கல்வெட்டில் உள்ள தகவலின்  படி நாம் அறியமுடிகிறது. இன்று எண்ணெய் இல்லா  (மின் விளக்கு) விளக்கு இருந்தும் அதை ஏற்றவோ, இல்லாதா இடத்தில விளக்கு வைக்கவோ ஆளும் இல்லை  மக்களுக்கு மனமும் இல்லை என்பதே உண்மை. இந்த கோவிலில் நந்தா  விளக்கு கொடுத்ததோடு அல்லாமல் அதை ஏற்ற 95 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளான். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் கொடுத்தவன் பெயரும் அதை பெற்றுகொண்டவன் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கொடுத்தவன் பெயர் அரசூர் கிழவன் வேளான் மதுராந்தகன் என்றும் பெற்றுகொண்டவன் பெயர் பங்கிபுஞ்சையன் என்றும் உள்ளன. ஆடுகளை பெறுவதற்கு முன் மதுராந்தகன் வைத்த  நந்தா  விளக்கிற்கு தானும் தன்  வர்க்கத்தாரும் தினதோரும்  விளக்கு எரிக்க நெய் தருவதாக உறுதி அளித்து அதை பெற்றுகொள்கிறான்.  


பின்னர் வந்த இரண்டாம் குலோத்துங்க சோழன் அவனது ஆட்சி ஆண்டில் இவ்வூர் "இடையாற்றுப்பாக்கமான ராஜவிச்சாதிர சதுர்வேதிமங்கலம்" எனக்மாற்றி உள்ளதே தகவலை கோவில் கல்வெட்டில் அறியலாம்.. கோயிலில் விளக்கு எரிக்க இவ்வூரைச் சேர்ந்த அருளாளப்பட்டன் மகள் ஆண்டமைச்சாநி என்ற பெண் புரிசை ஊரார் வசம் 30 காசுகள் அளித்தும், அவர்களிடமிருந்து நிலம் ஒன்றினை வாங்கியும் "திருநந்தாவிளக்குப் பட்டியாக" அளித்த செய்தியினையும்.மேற்படி பெண் 'திருநந்தாவிளக்குப்பட்டியாக' அளித்த நிலம் தண்ணீர் வருவதற்கு வசதியில்லாததால் பயிர் செய்ய இயலாமல் கிடந்தது. இதனால் திருக்கோயிலில் விளக்கெரிக்கும் பணி தடைபட்டது. எனவே இந்நிலத்தினை ஊராரே பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நந்தா விளக்கு எரிக்க உதவும் பொருட்டு பசுக்களை தானமளித்ததாக இரண்டாம் இராஜராஜன் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.


இக்கற்றளி முதலாம் குலோத்துங்க சோழரின் ஆணையின் பேரில் 'சந்திரசேகரன் இரவி என்ற சோளேந்திர சிங்க ஆச்சாரியன்' என்பவர் எடுப்பித்ததையும் கல்வெட்டு பொறித்ததையும் முதலாம் குலோத்துங்க சோழரின் 37வது ஆட்சியாண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை நாமும் ரசிப்போம் நம் சந்தததியினருக்கும் சொல்லிகொடுப்பொம். உலக வரலாற்றை  படிக்கும் முன் நம் வரலாற்றை படிப்போம் மதிப்போம்!


கல்வெட்டு தகவல்: http://www.varalaaru.com/